search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணப்பட்டுவாடா புகார்"

    • 3 ஷிப்டுகளாக பறக்கும் படை அதிகாரிகள் நடத்தி வரும் வாகன சோதனையில் இதுவரை ரூ.100 கோடியை தாண்டி பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் பிடிபட்டு உள்ளன.
    • 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒரே நேரத்தில் சென்று சோதனை நடத்தினார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    தேர்தலுக்கு இன்னும் 16 நாட்களே இருக்கும் நிலையில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் கொடுப்பதை தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் இரவு பகலாக நடத்தப்பட்டு வரும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 3 ஷிப்டுகளாக பறக்கும் படை அதிகாரிகள் நடத்தி வரும் வாகன சோதனையில் இதுவரை ரூ.100 கோடியை தாண்டி பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் பிடிபட்டு உள்ளன.

    அரசியல் கட்சியினரின் வாகனங்கள், பொதுமக்களின் வாகனங்கள் என அனைத்து தரப்பினரின் வாகனங்களையும் எந்தவித பாகுபாடுமின்றி சோதனை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ள போதிலும் பறக்கும் படை அதிகாரிகள் சில இடங்களில் பாரபட்சம் காட்டியதை தொடர்ந்து அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பணப்பட்டு வாடாவை தடுத்து நிறுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை இன்று அதிரடியாக தொடங்கி உள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரியான சத்யபிரதா சாகு, இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள், அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினர்.

    அப்போது பணப்பட்டு வாடாவை தடுப்பதற்கு தேர்தல் ஆணையத்துடன் வரும் நாட்களில் ஒருங்கிணைந்து செயல்பட அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய அமைப்புகளை சேர்ந்த அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

    வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக சென்னையில் குறிப்பிட்ட சில இடங்களில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் தரப்பில் பரபரப்பான புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னையில் இன்று 5 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ஓட்டேரி பகுதியில் சொகுசு வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பில் ஒப்பந்ததாரர் ஒருவரது வீட்டில் இன்று காலை 7 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

    10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒரே நேரத்தில் சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது தொழில் அதிபரின் வீட்டில் ரகசிய இடங்களில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது பற்றி அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது.

    இதேபோன்று கொண்டித்தோப்பு பகுதியிலும் வடமாநிலத்தை சேர்ந்த தொழில் அதிபரின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இவர்கள் இருவரும் எலக்ட்ரிக் பொருட்களை மொத்தமாக சப்ளை செய்யும் பணியிலும் ஒப்பந்த பணிகளிலும் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே பரிசுப் பொருட்களை அரசியல் பிரமுகர்களுக்கு இந்த 2 தொழில் அதிபர்களும் மொத்தமாக சப்ளை செய்துள்ளனரா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இது தவிர புரசைவாக்கம் உள்ளிட்ட மேலும் 3 இடங்களிலும் தொழில் அதிபர்களின் வீடுகளை முற்றுகையிட்டு வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களது வீடுகளிலும் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே அரசியல் பிரமுகர்களின் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.

    திருப்பூர் பூமலூர் ஊராட்சிக்குட்பட்ட கிடாதுறை பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் ஒருவரது வீட்டில் கோவையை சேர்ந்த வருமான வரித்துறை உதவி கமிஷனர் தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தினர். வருமான வரித்துறையினரின் விசாரணைக்குப்பின் வீட்டில் இருந்து ரூ.11 லட்சம் பணம் மற்றும் சில ஆவணங்களை எடுத்துச்சென்றனர்.

    இதேப்போல் திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த அணிக்கடவு பகுதியைச்சேர்ந்த தி.மு.க. பிரமுகர் ஒருவரின் வீட்டுக்கு 8 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் வந்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 6 மணி நேரம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.

    வாக்காளர்களுக்கு குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் இப்போதே பணப்பட்டு வாடா செய்து வருவதாக 2 நாட்களுக்கு முன்பே தகவல் பரவியது. சென்னை புறநகர் பகுதியில் உள்ள தொகுதி ஒன்றில் வாக்காளர்களுக்கு பணத்தை கொடுத்து விட்டு அரசியல் கட்சியினர் தங்களுக்குத்தான் ஓட்டு போட வேண்டும் என்று சத்தியம் வாங்கி இருப்பதாகவும் தகவல் பரவியது.

    இந்த நிலையில்தான் தேர்தல் ஆணையம் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் கூட்டாக இணைந்து பணப்பட்டு வாடாவை தடுக்க அதிரடி வேட்டையில் இறங்கியுள்ளனர். இதனால் அரசியல் கட்சியினர் கலக்கம் அடைந்துள்ளனர். தேர்தல் களத்திலும் பரபரப்பு நிலவுகிறது.

    ×